ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் நுரை- விவசாயிகள் அதிர்ச்சி
- கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- நீரா அல்லது நுரையா என்று சந்தேகப்படும் அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரிலிருந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.
ஓசூர்:
கர்நாடகா நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, வரத்தூர் ஏரி வழியாக பெங்களூரு மாநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயான கழிவுநீர் கலந்தும் தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருநிறத்தில் நீர் வருகிறது
கடந்த 1 வார காலமாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நுரை அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விநாடிக்கு 640 கனஅடி வந்தது.
அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக 640 கனஅடிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆற்றில் வெளியேற்றப்படுவது நீரா அல்லது நுரையா என்று சந்தேகப்படும் அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரிலிருந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.
துர்நாற்றத்துடன் நீர் கருநிறத்திலும், ரசாயன நுரை பனிக்கட்டிகளை போன்று காட்சியளித்து குமட்டலை ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.