சாலை நடுவில் மிளிரும் 'மெதுவாக செல்லுங்கள்' வாசகம்- இரவு நேரங்களில் விபத்து தடுக்க நடவடிக்கை
- அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் விளக்குக் கம்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் தானியங்கி எச்சரிக்கை பலகைகள் இயங்கும்.
- சாதனம் தெரு விளக்குகள் எரியும் நேரமான மாலை 6 மணிக்கு அதனுடன் சேர்ந்து இயங்கும்.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா முதல் திருப்பத்தூர் இடையே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ஆபத்தான விபத்துகளை குறிக்கும் கரும்புள்ளிகளில், சிறிய எல்.இ.டி. புரொஜெக்டர்கள் மூலம் தானாகவே இயங்கும் எச்சரிக்கை பலகைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை-பெங்களூரு சாலையில் தினமும் 1.2 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.
தற்போது, பகல் நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், எச்சரிக்கை பலகைகள் உள்ளன. இருப்பினும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழும் போது, அதனை தடுப்பதற்கு ஏற்ற எச்சரிக்கை பலகைகள் இல்லை.
"முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க உதவும். இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது தானியங்கி புரொஜெக்டர்கள் மூலம் சாலையின் நடுவில் கோ ஸ்லோ (மெதுவாக செல்லுங்கள்) என ஆங்கில எழுத்துக்கள் மிளிர்கின்றன.
எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்றன" இரவு நேரங்களில், சில இடங்களில் மக்கள் கடப்பதை நாம் திடீரென்று கவனிக்கிறோம்.
அந்த இடங்களில் விபத்தை இதன் மூலம் தவிர்க்க முடியும்.
சிறிய தானாகவே இயங்கும் எல்.இ.டி புரொஜெக்டர்கள் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை பலகைகள் சாலையின் மையத்தில் 'மெதுவாக செல்லுங்கள்', 'குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்' மற்றும் 'போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிதல்' போன்ற சாலை விதிகளை பிரதிபலிக்கும்.
வேலூரில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமுக்கு அருகிலும், கோணவட்டம் மற்றும் மேல்மொணவூர், பச்சை குப்பம், வெலக்கல்நத்தம் மற்றும் திருப்பத்தூரில் வளையாம்பட்டு பாலம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் விளக்குக் கம்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் தானியங்கி எச்சரிக்கை பலகைகள் இயங்கும்.
இந்த சாதனம் தெரு விளக்குகள் எரியும் நேரமான மாலை 6 மணிக்கு அதனுடன் சேர்ந்து இயங்கும். அதன்படி காலை தெரு விளக்குகள் அனைக்கும் நேரமான காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.