தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்
- காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் இருந்து பஸ்கள் செல்லவில்லை.
மேலசொக்கநாதபுரம்:
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மாநில அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டத்தில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா வருகை தர உள்ளார். அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து இடுக்கி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் முழு வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று காலை முதல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. ஆட்டோ, வாகனங்கள் இயக்கப்படாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தின் எல்லைப் பகுதியான போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் போடி முந்தல் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.
இதனால் கேரள தேயிலை மற்றும் ஏலத்தோட்டத்திற்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு உள்ளே திருப்பி விடப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் தேனி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குமுளி, கம்பம் மெட்டு சோதனைச்சாவடியிலும் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து பஸ்கள் செல்லவில்லை.