கியாஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கு செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு- சாலை மறியல்
- புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர்.
- கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரூர் பகுதியில் உள்ள கியாஸ் முகவர் ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தை வாங்கி, பெரிய அளவில் கட்டிடம் கட்டியுள்ளார். அப்பொழுது கிராம மக்கள் எதற்காக கட்டிடம் என கேட்டுள்ளனர். தனது மகன் மருத்துவம் முடித்துள்ளதால், மருத்துவமனை கட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணி முடிந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு என கட்டிடத்தில் எழுதப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குடியிருப்புகளை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டரை சேமித்து வைத்தால், ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் பேரிழப்பு ஏற்படும். எனவே இங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது குறித்து கியாஸ் முகவர் ராஜேந்திரன் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகளிடம் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அப்புறப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர். ஆனால் அதனை அப்புறப்படுத்துவதற்கு அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிலிண்டர்களை சேமிப்பு கிடங்கில் இறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் சிலிண்டர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரூர்-தருமபுரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த அரூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து லாரியிலிருந்து இறக்கப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் ஏற்றப்பட்டது. ஆனால் பாதி சிலிண்டர்கள் சேமிப்பு கிடங்கில் இருந்ததால், கிராம மக்கள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உள்ளே இருக்கின்ற சிலிண்டர்களை லாரியில் எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் ஒருவர் சேமிப்பு கிடங்கின் பூட்டை கல்லால் உடைக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு அரூர் வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிடலாம். நமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அரசு ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடலாம் என கூறி, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தருமபுரி பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.