கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை
- தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
- இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவிகள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர்.
எனவே தமிழக அரசு, இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரு காலக்கெடுவிற்குள் கண்டறிந்து, பணி நீக்கம் செய்யவும், தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்கவும், இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.