கோ பர்ஸ்ட் விமானங்கள் ரத்து- சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் அதிகரிப்பு
- கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளது.
- சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
சென்னை:
கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கோ பர்ஸ்டின் அனைத்து விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கோ ஏர் விமானங்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து இந்த விமான நிறுவன விமானங்கள் மும்பை, கேரளா, அந்தமான் ஆகிய மாநிலத்திற்கு விமானங்களை இயக்குகிறது.
சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.
கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளதால் சென்னையில் இருந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் மற்ற விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல் 'கோ பர்ஸ்ட்' விமானங்கள் செல்லும் மற்ற மாநிலங்களில் இருந்து அதன் வழித்தடத்தில் உள்ள நகரங்களுக்கு விமான கட்டணத்தை மற்ற விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.