தமிழ்நாடு

நுங்கம்பாக்கத்தில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள் 200 பேர் கைது

Published On 2024-01-30 06:45 GMT   |   Update On 2024-01-30 06:45 GMT
  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
  • அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

சென்னை:

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு கல்லூரி சாலையில் நூற்றுக்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வி துறையின் அலுவலக வளாக கதவுகள் பூட்டப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டது.


ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், மாயவன், அன்பரசு ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். போலீசார் முன் எச்சரிக்கையாக அவர்களை ஒன்று சேர விடாமல் உடனடியாக கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.

மறியலில் ஈடுபட வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதால் மறியல் போராட்டத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. மறியலுக்கு முன்பே 200 பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.


போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:-

போராட்டம் நடத்தக்கூட அரசு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை நிச்சயமாக வீசும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News