தென் மாவட்டங்களில் கனமழை.. மீட்பு பணிகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ஆலோசனை
- கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
- கனமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் ஆலோசனை.
வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராஜ் பவனில் நடைபெற இருக்கிறது.