சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி: பைலை திருப்பி அனுப்பினார் கவர்னர் ஆர்.என். ரவி
- ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
- தமிழக அரசு அனுப்பி வைத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கு தேவையான ஊழியர்களை போட்டி தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது.
இந்த தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும்.
அரசு அலுவலகங்களில் உள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்களை தேர்வு செய்வது டி.என்.பி.எஸ்.சி.யின் முக்கிய பணியாகும். இந்த அமைப்புக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சி. யில் 4 உறுப்பினர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) டி.என்.பி.எஸ்.சி. பொறுப்பு தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையொட்டி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 8 உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்களையும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பியது.
தமிழக அரசு அனுப்பி வைத்த இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.
இப்போது சைலேந்திர பாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும், பிரகாஷ் சிங் என்பவரது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இந்த நியமனம் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
டி.ஜி.பி.யாக இருந்தபோது சைலேந்திர பாபு ஓய்வுபெற்ற தேதியை பொருட்படுத்தாமல் டி.ஜி.பி.யாக 2 ஆண்டுகள் பதவி வகித்ததால் கடந்த ஜூன் 30-ந்தேதி தனது 61-வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனால் இப்போது நியமிக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலம் 6 ஆண்டுகள் என்றாலும், அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும்.
இதை சுட்டிக்காட்டி உளள கவர்னர் ஆர்.என்.ரவி, சைலேந்திரபாபு நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தனக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த நியமனம் தொடர்பாக அறிவிப்புகள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என்றும் அரசுக்கு கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். எனவே இது தொடர்பான விவரங்களை விளக்கமாக தமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதவிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எவ்வாறு இறுதி செய்யப்பட்டனர் என்பதையும் விளக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் அரசுக்கும், கவர்னருக்கும் மீண்டும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.
கவர்னர் குறிப்பிட்டுள்ள விளக்கங்களுக்கு தமிழக அரசு விரிவாக பதில் தயாரித்து வருவதாகவும். விரைவில் அந்த கோப்பு முழு விளக்கங்களுடன் கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டு கட்டுப்பாட்டு சட்டம் 2022-ன் கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களின் நியமனத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.