தமிழ்நாடு (Tamil Nadu)

சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடு வாங்க குவிந்த மக்கள்

Published On 2023-11-04 03:42 GMT   |   Update On 2023-11-04 03:42 GMT
  • திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
  • வழக்கத்தை விட வியாபாரம் அதிகளவில் இருந்ததாகவும், 80 சதவிகித ஆடுகள் விற்பனை ஆனது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மண்ணச்சநல்லூர்:

சமயபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பல ஆண்டுகளாக ஆட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, பாடாலூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வாரந்தோறும் கொண்டு வந்து விற்பது வழக்கம்.

அவ்வாறு விவசாயிகள் விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் கடா ஆடுகளை விற்பனைக்காவும், கோட்டை ஆடுகள் மற்றும் ஆடு குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி செல்வதை பல ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆட்டுக்கறி விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இந்த வாரச்சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்தனர். வழக்கத்தைவிட அதிகளவில் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட வியாபாரம் அதிகளவில் இருந்ததாகவும், 80 சதவிகித ஆடுகள் விற்பனை ஆனது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடுகளின் விலைகளில் பெரிய அளவில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் வியாபாரம் களைகட்டியதாகவும், வியாபாரிகளும், விற்பனையாளர்களும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News