85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது எப்படி?
- வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.
- தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த முறை ஏற்கனவே பல பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதில் 12-டி படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.
மத்திய பிரதேசம், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்திருந்தனர். அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நாளுக்கு முன்பாக வீட்டில் இருந்தே வாக்களிக்கும் நாளை நிர்ணயிப்பார். வாக்கார்களின் வீட்டுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். அதில் அவர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் அந்த தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.
தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாக்குப் பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு வாக்குப்பதிவு வீடியோ எடுக்கப்படும். இது சுமார் 20 நிமிடங்களில் முடிந்து விடும். அவர்கள் வாக்குகள் தபால் வாக்கு மூலம் எண்ணப்படும்.