ஈரோடு கிழக்கு 'கை'க்கு வசமாகியது எப்படி?
- 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று 8,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- மறைந்த இளம் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. தொகுதியில் ஒரு வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக வலம் வந்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளார். மொத்தம் பதிவான வாக்குகள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 அதாவது 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் இளங்கோவன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 அதாவது 64.58 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். எப்படி சாத்தியமாயிற்று இவ்வளவு பெரிய வெற்றி?
அ.தி.மு.க. எப்படி இவ்வளவு சரிவை சந்தித்தது? என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நிச்சயம் எண்ணி பார்த்திருக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த வகையில் இளங்கோவன் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி 2011-ம் ஆண்டு உருவானது. அப்போதிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011, 2016, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் 4 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று 10 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7,794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று 8,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொங்கு மண்டலம் என்றாலே அ.தி.மு.க. வலுவான பகுதி என்ற பெயர் உண்டு. அது தவறும் அல்ல. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றுப்போனது என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் இடம்பெற்று இருந்தது. இந்த 2 கட்சிகளின் வாக்குகளும் எங்கே போனது? என்ற ஆச்சரியமும் வருகிறது.
இந்த வெற்றிக்கு காரணம் ஆளும் கட்சியின் நல்லாட்சி மற்றும் மக்கள் தி.மு.க. கூட்டணி மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றெல்லாம் ஆளும் கட்சி தரப்பில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சி தரப்பில் ஜனநாயகம், பணநாயகத்தால் தோற்கடிக்கப்பட்டது என்றும் பேசப்படுகிறது.
இவையெல்லாம் மேம்போக்கான வாதமாகத்தான் இருக்கும். உண்மையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னதான் நடந்திருக்கிறது என்று அலசிப்பார்க்கும் போது பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
மறைந்த இளம் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. அந்த தொகுதியில் ஒரு வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக வலம் வந்திருக்கிறார். எல்லா தரப்பினரிடமும், குறிப்பாக சிறுபான்மையினரிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்து உள்ளார். இதன் மூலம் இந்த தேர்தலில் களம் இறங்கியது அவரது தந்தை என்பதும், அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பொறுத்தவரை ஒரு தலைவர் அந்தஸ்தில் இருப்பவர் அவர் மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்ற எதுவும் வந்ததில்லை.
இதனால் மறைந்த எம்.எல்.ஏ.வின் அனுதாபம், இளங்கோவன் மீதுள்ள மரியாதை இந்த இரண்டும் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.
எல்லாவற்றையும் விட முக்கியம் தி.மு.க. கூட்டணி வகுத்த தேர்தல் வியூகம். களத்தில் போட்டியிட்டது காங்கிரசாக இருந்தாலும், இந்த தேர்தல் முடிவு 21 மாத கால ஆட்சிக்கு ஒரு அங்கீகாரமாகவும், அடுத்து வர போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் அமையும் என்பதால் இந்த தேர்தலை தி.மு.க. இடைத்தேர்தலாக கருதவில்லை. தங்களுக்கான எடைத்தேர்தலாகவே நினைத்து பணியாற்றியது.
இதனை ஒரு கவுரவ பிரச்சினையாகவும் எடுத்ததன் விளைவு, தி.மு.க.வே போட்டியிடுவது போன்ற எண்ணத்தில் அந்த கட்சியினர் களம் இறங்கி பணியாற்றினார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தி.மு.க.வினர் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்கள். ஒரு யுத்த களத்தில் எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டுமோ அதே போல் வியூகத்தை அமைத்தார்கள். மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 746 வாக்காளர்களில் எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்பதை முதலில் பிரித்து வகுத்து வைத்தார்கள்.
முதலியார்கள் 80 ஆயிரத்து 142 பேர். அதாவது 35 சதவீதம் பேர். அடுத்ததாக இஸ்லாமியர்கள் 62 ஆயிரத்து 126 பேர். அதாவது 27.15 சதவீதம். அடுத்ததாக பிள்ளைமார் 19 ஆயிரத்து 166 பேர். அதாவது 8.37 சதவீதம். தலித்துக்கள் 14 ஆயிரத்து 360 பேர். அதாவது 6.28 சதவீதம். கிறிஸ்தவர்கள் 12 ஆயிரத்து 650 பேர். அதாவது 5.53 சதவீதம், வெள்ளாள கவுண்டர்கள் 9 ஆயிரத்து 450 பேர் அதாவது 4.13 சதவீதம். நாயக்கர் 8 ஆயிரத்து 620 பேர். அதாவது 3.77 சதவீதம். இவர்களுக்கு அடுத்தப்படியாக வட இந்தியர்கள், பிராமணர்கள், நாடார்கள், தேவர்கள், போயர், வன்னியர், விஸ்வகர்மா, செட்டியார்கள் ஆகிய சமூகத்தினர் சராசரியாக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் வரை இருக்கிறார்கள்.
இந்த சதவீதத்தை அடிப்படையாக வைத்து முதலியார்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் ஆகிய 4 சமூகத்தினர் 73.99 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த 73 சதவீதத்தில் 60 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பது தி.மு.க.வினருக்கு கட்சி மேலிடத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. இந்த இலக்கை எட்டுவதற்குதான் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று திட்டமிட்டு தேர்தல் களத்தில் கையாண்டு இருக்கிறார்கள். முதலில் 11 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக பகுதியை பிரித்து இருக்கிறார்கள். 3 முதல் 4 வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் தேர்தல் பணியை கையில் எடுத்துள்ளார்கள்.
அதற்கு ஏற்றாற்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களை தங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைத்துக் கொண்டார்கள். அமைச்சர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என்று தெரு வாரியாக ஒரு பெரிய படை பலமே முகாமிட்டது. அப்படி முகாமிட்டவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் குறைந்த பட்சம் 100 முதல் 250 வாக்காளர்களை வைத்திருந்தார்கள். அவர்களை தினசரி சந்திப்பது, கவனிப்பது என்று தங்கள் கண் பார்வையிலேயே வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 20 நாட்களாக வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாத வகையில் ஒருவிதமான மூளை சலவைக்குள் கொண்டு செல்வது போல் கொண்டு சென்று விட்டார்கள்.
அதில் முக்கியமாக எதிராளிகளை சந்திக்க முடியாத வகையில் அவர்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி வைத்துக்கொண்டார்கள். அடுத்ததாக பணத்துக்கு பஞ்சம் இல்லை. பரிசு பொருட்களுக்கும் குறைவு இல்லை. வாரி வழங்கப்பட்டது. 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் என்ற அடிப்படையில் புதுவகையான வேலைத்திட்டமும் செயல்படுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட வாக்காளர்கள் ஒருவித மயக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தார்கள். இவைகளால்தான் இந்த வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.