தமிழ்நாடு

சேலத்தில் 5 லட்சம் பேர் திரள்கிறார்கள்: தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

Published On 2024-01-08 05:38 GMT   |   Update On 2024-01-08 05:38 GMT
  • மாநாட்டில் உதயநிதி என்ன பேசப்போகிறார் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்று நோக்க உள்ளனர்.
  • பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கான பணிகளில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த மாநாட்டில் 'நீட் விலக்கு' கோரி நடத்தப்பட்டு வந்த கையெழுத்து இயக்கத்தின் நகல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

மத்திய அரசுக்கு அனுப்ப இருக்கும் இந்த கையெழுத்து பிரதிக்காக மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் பெறப்பட்டு வருகிறது.

இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுகான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் சேலம் இளைஞரணி மாநாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த மாநாட்டில் உதயநிதி என்ன பேசப்போகிறார் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்று நோக்க உள்ளனர்.


ஏனென்றால் அண்மையில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து விட்டு வந்துள்ளதால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசுவாரா? அல்லது பொதுவாக மத்திய அரசை குறை கூறுவாரா? என்பதை பார்க்க வேண்டும்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

அதற்கு முன்னோட்டமாக இளைஞரணி மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்துவதால் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் அடைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

மூத்த அமைச்சரான கே.என்.நேரு களத்தில் இறங்கி மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் மாநாட்டில் திரள்வார்கள் என்பதால் அவர்கள் தங்கி செல்வதற்கு வசதியாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்துள்ளனர்.

வெளியூர்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு விழாக்களில் இப்போதே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும், அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

தென் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்த நிகழ்வுதான் முன்னிலைப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சேலம் மாநாட்டுக்கு பிறகு முக்கிய பொறுப்புகள் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்கும் போது அவரது அரசியல் அந்தஸ்து மேலும் உயரும் என்று மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News