தமிழ்நாடு

பயணிகளை மிரட்டும் சாலை பள்ளங்கள்- பருவமழைக்கு முன்பு சீரமைக்கப்படுமா?

Published On 2022-09-22 09:17 GMT   |   Update On 2022-09-22 09:17 GMT
  • பள்ளங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள்.
  • ஒரு சாலையில் ஒரு பணி நடைபெற்றால் அந்த பணியை தொடர்ந்து செய்து முடிப்பதில்லை.

சென்னை:

சென்னை முழுவதும் மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பது, புதிதாக கட்டுவது போன்ற பணிகள் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

7 மீட்டர் அகலத்துக்கும் அதிகமான ரோடுகளில் பெரும்பாலும் கால்வாய் பணிகள் நடைபெறுகிறது.

இதில் பெரும்பாலான இடங்களில் பணிகள் முடிவடையாமல் கால்வாய்கள் திறந்து கிடக்கிறது. இந்த பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது.

மின்வாரிய பணிகள், மழைநீர் கால்வாய்கள் என்று பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டு எங்கும் குழிகளாக காட்சியளிக்கின்றன. ஒரு சாலையில் ஒரு பணி நடைபெற்றால் அந்த பணியை தொடர்ந்து செய்து முடிப்பதில்லை. அது அரைகுறையாக கிடக்கும். கேட்டால் பக்கத்து சாலையில் முடிந்தால்தான் இணைக்க முடியும் என்பார்கள்.

இப்படியே ஒவ்வொரு தெருக்கள் முதல் பெரிய சாலைகள் வரை எல்லா பகுதிகளிலும் பள்ளங்கள்...பள்ளங்கள்.

இந்த பள்ளங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். ஆதம் பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் விழுந்து படுகாயம் அடைந்தார். நேற்று இரவு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் அருகில் உள்ள கால்வாயில் ஒருவர் விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டனர்.

கே.கே.நகர் அண்ணா மெயின் ரோடு, அண்ணா சாலை, வால்டாக்ஸ் ரோடு, ஜி.என். செட்டி ரோடு, பெரம்பூர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் என்று எல்லா பகுதிகளும் இதே நிலையில் தான் உள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர்) வடகிழக்கு பருவமழை தொடங்கும். மழைக் காலத்தில் சாலைகளில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.

அதற்குள் இந்த பணிகள் முடிவடைவது சாத்தியம் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

இன்னொரு பக்கம் கே.கே.நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் ராட்சத குழாய்கள் பதித்து பணிகள் செய்தனர். ஆனால் தண்ணீர் எங்கும் வடிந்து செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான். இந்த சூழ்நிலையில் பருவமழை பெய்தால் தண்ணீர் எங்கும் செல்ல முடியாதபடி வெள்ள அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் பீதியில் உள்ளார்கள்.

கொசஸ்தலையாறு திட்டத்தில் இதுவரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1058 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வரும் கால்வாய் பணிகளில் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கால்வாய் சீரமைப்பு, தூர்வாருதல் போன்ற பணிகள் தீவிரமாக நடப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிந்துவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News