நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
- விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
- பல்வேறு இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வங்க்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, #விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள்; அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.