ரூ.57.32 கோடிக்கு சொத்து: கனிமொழி எம்.பி. சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்வு
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
- தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.