தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம்: முதலமைச்சர்- 10 கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

Published On 2023-06-07 06:28 GMT   |   Update On 2023-06-07 06:28 GMT
  • பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
  • பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் கடந்த 3-ந் தேதி சென்னையில் கொண்டாட பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அன்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்து காரணமாக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தி.மு.க.வின் பொதுக்கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த பொதுக் கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

அதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் என்பதால் மிகப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பெரிய பெரிய வரவேற்பு வளைவுகள், வாழை மர தோரணங்கள், வழி நெடுக கட்சிக் கொடி என பெரம்பூர் பின்னிமில் பகுதியே விழா கோலம் பூண்டுள்ளது.

மேடை அமைப்பும் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை குறிக்கும் வகையில் அவரது பிரமாண்ட கட்அவுட்களும் மேடை அருகே அமைக்கப்பட்டுள்ளது. மின்னொளி அலங்காரமும் பெரிய அளவில் செய்யப்பட்டு உள்ளது.

பொதுக் கூட்டத்தை பொது மக்கள் அமர்ந்து பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சேர்களும் மைதானத்தில் போடப்பட்டுள்ளது.

இந்த பொதுக் கூட்டத்தை காண்பதற்கு சென்னை காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வர இருப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News