தமிழ்நாடு

மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும்- கிருஷ்ணசாமி

Published On 2024-07-03 09:41 GMT   |   Update On 2024-07-03 09:41 GMT
  • ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
  • தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.

மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.

ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News