மயிலாடுதுறையில் மீண்டும் சிறுத்தையா? நேரில் பார்த்ததாக தொழிலாளி அளித்த தகவலால் பரபரப்பு
- கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
- சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து 2 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேடுதல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது.
இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும் அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் காண, சுன்னாம் பால் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதனால் சிறுத்தை அரியலூரில் இருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்ததா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.