இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
- இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
- இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதம் இந்திய தேர்தல் கமிஷன் வழங்கிய முகவரியின் அடிப்படையில் தான் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. இரு அணியாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வை வழிநடத்துவதாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போதுவரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம், தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக 'ரிமோட்' வாக்குசாதனம் குறித்து விளக்குவதற்காக தேர்தல் கமிஷன் வரும் 16-ந்தேதி அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி உள்ளது. இதில் பங்கேற்கும் படி 2 பிரதிநிதிகளை அனுப்பும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.
இதுபற்றி தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததும் அந்த கடிதத்தை வாங்க வேண்டாம் என்றும் அதை மீண்டும் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கூறிவிட்டார். அதன்பேரில் தலைமை கழக நிர்வாகிகள் அந்த கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கருத்து கேட்டபோது, 'இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அரசியல் பின்னணி காரணமாக யாரையோ திருப்திபடுத்த இப்படி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்றும் இல்லாத பதவியை குறிப்பிட்டு கடிதம் வந்தால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அதை வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையை தமிழக தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து இருப்பது தெளிவாக உறுதியாகி இருக்கிறது.
இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினார்கள்.