சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த பக்தர்கள்
- வைகாசி மாத அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 4-ந்தேதியில் இருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தையொட்டி சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நள்ளிரவு முதல் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட்பு முன்பு குவிந்தனர். இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.
காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பக்தர்கள் வெயில் தெரியாத நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இன்று மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே தாணிப்பாறை வரை சென்று கோவிலுக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.
வைகாசி அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை மருத்துவக்குழுவினர் நியமிக்கப்படாதது அனைத்து தரப்பினருக்கும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது.