தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

Published On 2024-07-09 07:46 GMT   |   Update On 2024-07-09 07:46 GMT
  • வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
  • தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

சென்னை:

சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

பஸ் நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் இணைப்பு ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு, விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடைபாதை மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு யு வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News