தமிழ்நாடு

வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட மாணவியின் ரூ.3 லட்சத்தை வழங்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-05-12 08:14 GMT   |   Update On 2023-05-12 08:14 GMT
  • பே.டி.எம். தரப்பில், தங்கள் நிறுவனத்தில் பணபரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது.
  • வாடிக்கையாளருக்கு தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பண பரிவர்த்தனை நடைபெறாது என வாதிடப்பட்டது.

சென்னை:

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர், கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட ஊதிய தொகையான 3 லட்சம் ரூபாய், தனது (தனியார்) வங்கி கணக்கில் போட்டு வைத்திருந்தார். இந்த கணக்குடன் பே.டி.எம். கணக்கை இணைத்து, டிஜிட்டல் முறையில் பணத்தை செலவு செய்து வந்தார்.

திடீரென இவர் கணக்கில் இருந்த பணம் மர்மநபரால் திருடப்பட்டது. இதுகுறித்து முதலில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த பணத்தை வங்கி நிர்வாகம் திருப்பித் தர மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பவித்ரா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது தனியார் வங்கி தரப்பில், மாணவியின் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை. அவரின் பே.டி.எம். கணக்கிலிருந்து காணாமல் போய் உள்ளது. இதற்கு வங்கி எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என வாதிடப்பட்டது.

பே.டி.எம். தரப்பில், தங்கள் நிறுவனத்தில் பணபரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. வாடிக்கையாளருக்கு தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பண பரிவர்த்தனை நடைபெறாது என வாதிடப்பட்டது.

பே.டி.எம். மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் தலையிடுவதில்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மின்னணு பண பரிவர்த்தனைகள் செய்யும்படி, பொது மக்களை ஊக்குவிக்கும் நிலையில், மோசடிகளால் பாதிக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எந்த தவறும் செய்யாத நிலையில் மாணவி பணத்தை பறிகொடுத்து உள்ளார். பணத்துக்காக அலைக்கழிக்கப்படுகிறார்.

ரிசர்வ் வங்கி விதிப்படி, பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், வங்கி நிர்வாகமும், பே டிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

2 வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க வேண்டுமென பே.டி.எம் நிறுவனத்திற்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News