தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதா?- சென்னை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2023-03-13 08:09 GMT   |   Update On 2023-03-13 08:09 GMT
  • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சென்னை:

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில் அவர், சென்னையில் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விரோதமானது. அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உள்ளதாக கூறினார்.

மேலும், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்ற நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News