தமிழ்நாடு

மதுரை வைகை ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: சாலையில் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-11-25 08:10 GMT   |   Update On 2023-11-25 08:10 GMT
  • மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
  • வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்காகவும், திருமங்கலம் ஒருபோக பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று காலை 5899 கன அடி நீரானது திறக்கப்பட்ட நிலையில் மாலை 6ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று நீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டு 4969 கன அடி நீரானது குறைக்கப்பட்டுள்ள நிலையில் 2-வது நாளாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது.

மதுரை வைகையாற்றின் மையப் பகுதியான மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே உள்ள தடுப்பணை பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் வெள்ளநீர் வெளியேற முடியாமல் மெதுவாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணையின் மற்றொரு புறம் ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதி முழுவதிலும் வெள்ள நீரானது கடல் போல இரு புறங்களிலும் ஓடி செல்கின்றன.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு விவசாய தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் விரைவாக செல்ல முடியாத அளவிற்கு மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை அளித்த நிலையிலும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இடையே நிலவும் அதிகாரவரம்பு பிரச்சனையால் ஆறு முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது.

மேலும் தடுப்பணை அருகே உள்ள பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளதால் வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுப்பாதைகளான கோரிப்பாளையம், நெல்பேட்டை ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.

மேலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை பேரிடர் மீட்புத்துறையால் விடுக்கப்பட்ட நிலையிலும் வைகையாற்று பகுதிகளில் பொதுமக்கள் துணிதுவைப்பது, குளிப்பது, மீன்பிடிப்பது, கரையோரங்களில் வாகனங்களில் செல்வது போன்ற ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகையாற்று பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் இல்லாத நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக சென்று வருவதால் காவல்துறையினரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News