மகாத்மா காந்தியின் கனவு மோடியால் நிறைவேறுகிறது- பா.ஜனதா அறிக்கை
- ஸ்ரீ ராமர் தனக்கான கோவிலை எழுப்ப பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்கிறார்.
- மகாத்மாவின் கனவை அவரது மண்ணில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் நாளை (திங்கட்கிழமை) ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. நம் நாட்டில் புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகளுக் கும்மேலான போராட்டம். இதற்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்து உள்ளனர். அயோத்தியின் சரயு நதியில் ரத்தம் ஓடியதெல்லாம் வரலாறு.
அயோத்தியில் ராமர் கோவிலை தம் வாழ்நாளில் பார்த்து விடமாட்டோமா என கோடிக்கணக்கான மக்கள் ஏங்கினார்கள். ராமர் கோவிலை பார்க்காமலேயே போய்விடுவோமோ என பலர் கலங்கினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் என்பது சாத்தியமே இல்லை என பலர் நினைத்தார்கள். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, யாருக்கும் பிரச்சினையின்றி அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த நாள் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைப் போல மிகமிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. எது நடக்கவே நடக்காது என நினைத்தார்களோ அதை அனைத்துத் தரப்பினரும் மகிழும் வகையில் நடத்திக் காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஸ்ரீராமர் தனக்கான கோவிலை எழுப்ப பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்கிறார்.
அகிம்சை வழியில் போராடி சாதித்த மகாத்மா காந்தி, 'ராம ராஜ்ஜியம்' என்பதை தனது கனவாக, கொள்கை முழக்கமாக முன்வைத்தவர். மகாத்மாவின் கனவை அவரது மண்ணில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
ராமர் கோவில் திறப்புக்கு முன்பாக நம் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்து பிரதமர் மோடி தரிசனம் செய்து உள்ளார். ராமர் கோவிலுக்காக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12-ந் தேதி முதல் தரையில் படுத்துறங்கி கடுமையான விரதம் இருந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. செயற்கரிய செயலை செய்து முடித்த பிரதமர் மோடியின் புகழ் வரலாற்றில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இல்லங்கள் தோறும் விளக்கேற்றி புதிய விடியலை கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.