செஸ்வீரர்கள் தங்கும் ஓட்டல்களில் கொசுக்களை விரட்டும் ஊழியர்கள்
- வீரர்கள் உண்ணும் தினசரி உணவு வகைகளும் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பரிசோதனை.
- 120 உணவுத்துறை ஊழியர்கள் ஓட்டல்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நேற்று மாலை 3மணிக்கு 44வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்கியது. இப்போட்டி ஆகஸ்ட் 10வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 187 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் 21 நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, யோகா இயற்கை மருத்துவ குழுவினர் 50பேர் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து பூங்கா வழியாக யோகா பகுதிக்கு செல்லும் போது கொசுக்கள் தென்பட்டதாகவும், சிலரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் கொசுக்களை விரட்டுவதற்கு என்றே தனி ஊழியரை நியமித்து கொசு விரட்டும் மின்சார பேட்டுடன் பணியமர்த்தி உள்ளது. இதை தொடர்ந்து போர் பாய்ண்ட்ஸ் செஸ் அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் கொசு விரட்டுவதற்கு தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் உண்ணும் தினசரி உணவு வகைகளும் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 120 உணவுத்துறை ஊழியர்கள் ஓட்டல்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.