பனை மரத் தொழிலாளர்களின் நல வாரிய ஆலோசனை கூட்டம்- எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது
- அனைத்து பனைமரத் தொழிலாளர்களையும் உறுப்பினராக்கி அவர்கள் அனைத்து நலத் திட்டங்களின் பயன்களையும் பெற வேண்டும்
- பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட விவாதப் பொருட்களின் மீதும் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 5-வது கூட்டம் தொழிலாளர் ஆணைய ரகத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த 5-வது வாரியக் கூட்டத்தில் அரசு தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய நிர்வாக அதிகாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ.நாராயணன் பேசும் போது, "அனைத்து பனைமரத் தொழிலாளர்களையும் உறுப்பினராக்கி அவர்கள் அனைத்து நலத் திட்டங்களின் பயன்களையும் பெற வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லெண்ணத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தை புனரமைத்து வாரியத் தலைவர் நியமனம் மற்றும் பிரதிநிதிகள் நியமனம் செய்வதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தலைவரால் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட விவாதப் பொருட்களின் மீதும் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.