தமிழ்நாடு (Tamil Nadu)

மேகமலையில் கனமழை காரணமாக சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2023-01-24 05:01 GMT   |   Update On 2023-01-24 05:01 GMT
  • சுருளி அருவியில் நீராட வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
  • பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து சென்றது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக சீரான அளவு தண்ணீர் வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் நீராடி சென்றனர்.

குறிப்பாக தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள பூதநாராயணன் கோவிலில் வழிபட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர்.

இந்நிலையில் சுருளி அருவி நீர்பிடிப்பு பகுதியான மேகமலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையினால் சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை முதல் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் பிச்சை மணி தெரிவித்துள்ளார்.

இதனால் சுருளி அருவியில் நீராட வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து சென்றது.

இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News