கருணாநிதி நினைவிடம் கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்தது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- கடற்கரையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட பணி தான் கடலில் பேனா நினைவு சின்னம் என்பது.
- கடலில் பேனா சின்னம் அமைக்க மதிப்பீடு எதுவும் தயார் செய்யப்படவில்லை.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கொடிகம்பத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர தினத்துக்காக தலைமைச் செயலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தை ஆய்வு செய்தபோது துருப்பிடித்திருந்தது தெரியவந்ததால் கொடி கம்பத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இன்னும் ஓரிரு தினங்களில் புதுப்பிக்கும் பணி நிறைவடையும்.
மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி என்பது இரண்டு கட்டங்களாகும். பேனா நினைவுச் சின்னத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.
இப்போது கடற்கரையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட பணி தான் கடலில் பேனா நினைவு சின்னம் என்பது.
ஆனால் கடலில் பேனா சின்னம் அமைக்க மதிப்பீடு எதுவும் தயார் செய்யப்படவில்லை. இப்போது கடற்கரையில் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.