தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம்கள்- அமைச்சர் ஆய்வு

Published On 2023-12-24 05:16 GMT   |   Update On 2023-12-24 05:16 GMT
  • வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags:    

Similar News