தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
- காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.
சென்னை:
நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் 'எச்.3 என்-2' வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும்.
தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும்.
காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.
பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.