குற்றவாளி என அறிவிப்பு... பொன்முடியின் பதவி பறிபோகுமா...?
- ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
- தண்டனை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது.
சென்னை:
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில்:-
பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் நீடிக்க முடியாது. பதவிகள் உடனடியாக பறிக்கப்படும். மேலும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. மேல்முறையீட்டு மனுவில் ஒட்டுமொத்த தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். தண்டனை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது. சட்டப்பிரிவு 8(1)-ன் படி குறைந்த அளவு அபராத விதித்தால் கூட பதவி பறிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, மோடியை குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதும் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் ஒட்டுமொத்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிப்பு குறித்து நாளை மறுநாளில் வெளியாகும் தண்டனை விவரங்களுக்கு பிறகே தெரியவரும்...