கவர்னர் தான் அண்ணாமலை... அண்ணாமலைதான் கவர்னர்... அமைச்சர் ரகுபதி
- அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தருவோம்.
சென்னை:
தமிழக அரசின் சட்ட கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அது பரிசீலனை செய்யப்பட்டு 11 அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 21 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 420 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நபர்களுக்கு இன்று தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தருவோம்.
நீண்டகால சிறைவாசிகள் 49 பேருக்கு விடுதலை செய்ய ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளது.
கேள்வி:- நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை செய்ய தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?
பதில்:- அதாவது கவர்னரும், அண்ணாமலையும் ஒன்று என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். கவர்னர் தான் அண்ணாமலை. அண்ணாமலைதான் கவர்னர்.
இவ்வாறு அவர் கூறினார்.