குறுங்காலீசுவரர் கோவிலுக்கு புதிய தேர்-அன்னதான கூடம்: 25-ந்தேதி பணிகள் தொடங்கும் என அமைச்சர் தகவல்
- புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சட்டசபையில் இன்று விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசுகையில், "கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் கேட்டோம். அறநிலையத்துறை அமைச்சர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். மேலும் பங்குனி உத்திரம் போன்ற திருநாளில் தேர் வேண்டும் என்றும் பக்தர்கள் விரும்புகிறார்கள்.
எனவே அதை செய்து தருவதுடன் கோவில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-
"குறுங்காலீசுவரர் கோவிலுக்கு கடந்த கூட்டத்தொடரில் திருத்தேர் வேண்டும் என்று பிரபாகர ராஜா கேட்டார். ரூ.31 லட்சம் செலவில் தேருக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பசுமடம் கேட்டிருந்தார். அதற்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு பிரபாகர ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.
இந்த அரசு கேட்பதை மட்டுமல்ல. கேட்காததையும் செய்து கொடுக்கும் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசுகையில், "பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் சித்தர் போகர் வடிவமைத்த முருகன் சிலை அமைந்துள்ள திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அதேபோன்று தினசரி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பொதுமக்கள் அங்கு வருகை தரக்கூடிய நிலையில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவதற்காக திருமண மண்டபமும் கட்டித்தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டி தரப்படும். ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே போன்று பூம்பாறை திருக்கோவில் புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.