தமிழ்நாடு
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்
- கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை.
- விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 600 டிரைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
கொரோனா காலத்தில் பல்வேறு பஸ்கள் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை. போதுமான டிரைவர், கண்டக்டர் இல்லாத காரணத்திற்காகவே நிறுத்தப்பட்டது.
மேலும், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 600 டிரைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற போக்குவரத்து கழகத்திலும் புதிய டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிரைவர், கண்டக்டர் பணி நியமனத்திற்குப் பின் நிறுத்தப்பட்ட வழிதடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.