வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் 3-ந்தேதி புதிய புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 8-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 9-ந்தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.