தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் கட்டணம் 2 மடங்கு உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Published On 2023-06-12 09:40 GMT   |   Update On 2023-06-12 09:40 GMT
  • வாகனங்களில் பெரும்பாலும் பாஸ்ட் டேக் மூலம் பணம் எடுக்கப்படுவதால் இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தெரியவில்லை.
  • விமான நிலையத்தில் பயணிகள் இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ளமாட்டார்கள் என்றார்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்ற, இறக்க செல்லும் வாகனங்கள் முதல் 10 நிமிடத்துக்கு இலவசமாக அனுமதிக்கப்படும். அதன் பிறகு முதல் 30 நிமிடத்துக்கு ரூ.75, அதற்கு மேல் 30 நிமிடத்துக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே வசூலிக்கப்படுவதை விட தற்போது விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களுக்கு வழக்கத்தை 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 30 நிமிடத்துக்குள் திரும்பி வந்தாலும் ரூ.150 வசூல் செய்யப்படுவதாகவும், 30 நிமிடத்தை தாண்டினால் ரூ.225 வசூல் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

வாகனங்களில் பெரும்பாலும் பாஸ்ட் டேக் மூலம் பணம் எடுக்கப்படுவதால் இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும் போது, செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்த பிறகே கூடுதல் கட்டணம் பற்றி எங்களுக்குத் தெரியும். திரும்பி சென்று அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. தகவல் தெரிவிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்றார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "விமானநிலையத்துக்கு வரும் பயணிகளின் வாகனத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று நாங்கள் தனியார் நிறுவனத்திடம் கூறி உள்ளோம். இது தொடர்பாக அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ அறிக்கையையும் பெற்று உள்ளோம். இனிமேல், விமான நிலையத்தில் பயணிகள் இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ளமாட்டார்கள்" என்றார்.

Tags:    

Similar News