பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. நீர்வரத்து 652 கன அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 136.50 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 5987 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6244 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 136 அடியை கடந்துள்ளதால் இடுக்கி மாவட்டத்திற்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று இரவு முதல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 19280 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4854 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை10 மணிக்கு 25ஆயிரம் கனஅடி வரையிலும் மாலையில் மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று 69 அடியை அணையின் நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 127.42 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 629 கன அடி நீர் முழுவதும் வெளியேறி வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 56.30 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு 128 கன அடி. இருப்பு 432 மி.கன அடி.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையினால் அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
பெரியாறு 82.6, தேக்கடி 108, கூடலூர் 33.6, உத்தமபாளையம் 14.6, சண்முகாநதி அணை 88.4, போடி 87, வைகை அணை 25, மஞ்சளாறு 52, சோத்துப்பாறை 126, பெரியகுளம் 96, வீரபாண்டி 104.6, அரண்மனைபுதூர் 93, ஆண்டிபட்டி 86.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.