கொளத்தூர் 100 அடி சாலையில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல புதிய நடை மேம்பாலம்
- மாதவரம் பகுதியிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
- பாதசாரிகள் சாலையை கடப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.
கொளத்தூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறைந்த தூரத்தில் சாலை பயணம் செல்லவே வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதேபோல் மாதவரம் பகுதியிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மாதவரம் பஸ் நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான ரோடு கிரான்ட் நார்த்தன் டிரக் சாலை என்று அழைக்கப்படுகிறது. 100 அடி அகலம் உள்ள இந்தச் சாலையின் இரு பக்கமும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், மாநகர பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, தடா, பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம், மாதவரம் பகுதியில் உள்ள வணிகர்கள் வாகன ஓட்டிகள் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, வேளச்சேரி பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய பிரதான சாலையாக இந்த 100 அடி சாலை உள்ளது.
சீரிப்பாயும் வாகனங்களுக்கு இடையே கொளத்தூர் அடுத்த ரெட்டேரி, அம்பேத்கர் நகர், செந்தில் நகர், தாதங்குப்பம் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.
செந்தில்நகர் சாலை சந்திப்பில் குறுக்கும் நெடுக்குமாக 4 சாலைகள் இருப்பதால் பாதசாரிகள் கவனம் சிதறி ஓடும் நிலைமைக்கும் ஆளாகின்றனர். இந்த 100 அடி சாலையை கடக்க 5 முதல் 8 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் சாலையை கடக்கும்போது பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மாநில நெடுஞ்சாலை துறை செந்தில் நகர் சந்திப்பில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்து உள்ளது. ரூ.13.5 கோடி மதிப்பில் உள்வட்ட சாலை என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு சாலையில் இந்த புதிய நடை மேம்பாலம் அமைய இருக்கிறது. ஆலந்தூரில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டியதைப் போன்று லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களைக் கொண்டிருக்கும்.
இந்த நடைமேம்பாலம் 5 மீட்டர் அகலமும் 37 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். மேலும் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் தவிர இருபக்கங்களையும் இணைக்கும் படிக்கட்டுகளும் அமைய உள்ளன. மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் லிப்ட்டின் நுழைவுவாயிலில் சாய்தளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.விரைவில் செந்தில் நகர் சந்திப்பில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்லும் வகையில் நடை மேம்பாலம் வர உள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கொளத்தூர் செந்தில் நகர் சந்திப்பில் சாலையை கடந்து செல்வது சவாலானது. இந்த இடத்தில் நடைமேம்பாலம் வருவது முக்கியமானது. இந்தப் பணியை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
இதே போல் ராஜமங்கலம் அருகே உள்ள அம்பேத்கர் நகர் சந்திப்பு மற்றும் தாதங் குப்பத்திலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் சாலையை கடக்க பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அந்த இடத்திலும் நடை மேம்மபாலம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.