தமிழ்நாடு

புதிதாக கட்டப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் வீட்டை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்த 2 பேர் கைது

Published On 2023-06-13 06:34 GMT   |   Update On 2023-06-13 06:34 GMT
  • கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
  • தலைமறைவாக உள்ள வினோத், முனுசாமி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி தெல்லனஅள்ளி காலனி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது36). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் மகளும் உள்ளனர்.

இவர் தெல்லனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே மனைவியின் பெயரில் புதிதாக வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்டி வந்தார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (48), அண்ணாமலை (50), வினோத் (26), முனுசாமி (67) ஆகியோர் இப்பகுதியில் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருவதால் நீ வீடு கட்ட கூடாது என வேல்முருகனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனால் வேல்முருகன் வீடு கட்டும் பணியை தொடர்ந்து செய்து வந்ததால், ஆத்திரமடைந்த கோவிந்தன், அண்ணாமலை, வினோத், முனுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சென்று வேல்முருகன் கட்டி வரும் வீட்டை இடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகில் காவலுக்கு உறங்கி கொண்டிருந்த கட்டிட வேலை செய்த நபர்கள் மற்றும் வேல்முருகன் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது ஜேசிபி எந்திரம் மூலம் இடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேல்முருகன் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் கோவிந்தன், அண்ணாமலை ஆகிய 2 பேரை கைது செய்து நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், முனுசாமி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News