தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை- என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலைநிறுத்தம்

Published On 2023-07-15 03:36 GMT   |   Update On 2023-07-15 03:36 GMT
  • ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
  • என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றப்படாததால் இன்று (15-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

இது குறித்த சமாதான பேச்சுவார்த்தை கட லூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் (பொறுப்பு) பூமா தலைமை தாங்கினார். இதில் என்.எல்.சி. உதவி பொது மேலாளர் உமா மகேஸ்வரன், பயிற்சி துணை கலெக்டர் அபிநயா, நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வேண்டும் என கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும் போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.

இன்று மாலை வரை அரசிடம் பேசி உத்தரவாதம் அளிக்காவிட்டால் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags:    

Similar News