தமிழ்நாடு

தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு வேதனை தான் மிஞ்சியது

Published On 2024-03-01 06:40 GMT   |   Update On 2024-03-01 06:40 GMT
  • காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத்தராத தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.

இதனால் மத்திய அரசு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதி கொடுத்தனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் பறிபோய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நானும் ஒரு விவசாயி என்பதால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு அறிவித்து சட்டம் கொண்டு வந்தது. இதனால் இன்றைக்கு மட்டுமல்ல எப்போதுமே மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாது. இதனை சாதித்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றால் அது அ.தி.மு.க அரசுதான். விவசாயி நலமோடு வாழ அதிமுக அரசு எப்போதும் உதவும். காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டம் நடத்தி அதற்கு தீர்வு கண்டதும் அ.தி.மு.க அரசுதான்.


ஜெயலலிதா எண்ணங்கள் படி 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டோம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற நம்முடைய கோரிக்கையை அ.தி.மு.க.வின் 37 எம்பிக்கள் நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைக்க செய்ததும் அதிமுக தான். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு வேதனை தான் மிஞ்சியது.

மேலும் நமக்கு கிடைக்க கூடிய காவிரி நீர் கிடைக்கவில்லை. மேகதாதுவிலும் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதை திராணியில்லாத தி.மு.க அரசு கண்டு கொள்வதில்லை. போராடிப் பெற்றுத் தந்த வெற்றியை காக்க தவறியதும் தி.மு.க. அரசு தான்.

காவிரி ஆணையத்தில் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்ட வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அதிகாரிகள் ஓட்டு அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்யாமல் திமுக அரசின் அதிகாரிகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது சரியான செயல் அல்ல.

மேகதாது அணைகட்ட கருத்துரு வரக்கூடாது என்று அதிமுக போராடியது. ஆனால் தற்போது காவிரி ஆணையத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அது எந்த வகை தீர்மானம் என்று தெரியாத நிலை உள்ளது.

காவிரியில் இருந்து உரிய நீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் காய்ந்து வீணாகி விட்டது.

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால் ஒரு எக்டேருக்கு ரூ.84 ஆயிரம் நிவாரணம் கிடைத்து இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேப்போல் சம்பா, தாளடியும் உரிய தண்ணீரின்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை முடிக்காமல் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. தூர் வாரப்படாதால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை. பொதுப்பணித்துறை வசம் உள்ள 14,000 ஏரிகள், ஊராட்சி நிர்வாகங்கள் வசம் உள்ள 26,000 குளங்கள் ஆகியவற்றை குடிமராமத்து திட்டம் மூலம் புனரமைத்து தூர் வார உத்தரவிட்டது அதிமுக அரசுதான்.

அப்பொழுது ஏரி குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் வயல்களில் இயற்கை உரமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய இயலுமா? குடிமராமத்து திட்டம் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர் உயர்ந்தது. குடிநீர் தடை இன்றி கிடைத்தது. அந்தத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்தியது திமுக அரசு தான்.

தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர்சாதிக் என்பவர் 2000 கோடி போதை பொருட்கள் கடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையில்லாத ஆட்சி தான் காரணம்.

போதைப்பொருள் வழக்கில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அவர்கள் எம்.பியாகி தமிழக விவசாயிகளுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பார்கள்.

ஒருவேளை தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News