சாம்சங் தொழிலாளர் பிரச்சனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பேச வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
- தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது.
- தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில், நிர்வாகத்தினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு, தன்னுடைய அதிகார பலத்தின்மூலம் தொழிலாளர்களை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைக்கப் பார்க்கிறது. போராடுவது என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை ஒடுக்க நினைப்பது தொழிலாளர் விரோதப் போக்கு. அவர்கள் பெற்ற உரிமையை பறிக்கும் செயல் ஆகும்.
தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.