பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்... ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவதும், இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும், அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஊதியக் குழு பேச்சுவார்த்தை, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தற்போது மேற்கொண்டு உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. மக்களின் அச்சத்தினை போக்கும் வகையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.