தமிழ்நாடு

அசோக் நகரில் மரம் முறிந்து விழுந்து காரில் சென்ற முதியவர் காயம்

Published On 2023-06-20 09:36 GMT   |   Update On 2023-06-20 09:36 GMT
  • காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார்
  • அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

சென்னை:

சென்னை மாநகர் முழுவதும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதில் சுமார் 20 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் சாலையோர காய்ந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது மரக்கிளை விழுந்து முன்பகுதி நொறுங்கியது.

இதில் காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார். பிரபல தனியார் ஓட்டலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் நேற்று தி.நகரில் நடந்த அந்த ஓட்டலின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது தான் மரக்கிளை முறிந்து விழுந்து அவரது மார்பில் குத்தியது.

பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் பயணம் செய்த முதியவர் சுப்புவின் நண்பர் ஹாரிஸ் காயமின்றி தப்பினார். இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

சென்னை மந்தைவெளி நாட்டான் தெருவிலும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இதேபோன்று பல இடங்களிலும் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News