தமிழ்நாடு

இறந்த மகன் சேர்த்து வைத்த பணம்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மூதாட்டி

Published On 2022-11-01 04:05 GMT   |   Update On 2022-11-01 04:05 GMT
  • கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தவாறு மூதாட்டி ஒருவர் பரிதவிப்புடன் மனு கொடுக்க வந்தார். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்திருந்தார்.

எனது பெயர் மாரியம்மாள் (வயது 80). கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுந்தர்ராஜ். ஒரே மகன் செந்தில்குமார். கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர்.

லாரி டிரைவரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டான். இதனால் நான் தனியாக வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு எனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்தேன். அப்போது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றை பார்த்தேன். அதற்குள் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றேன். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை நான் மாற்ற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறேன்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கோரிக்கை வையுங்கள் என்று கூறினார்கள். அதை கேட்டு நான் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து அந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்து அவற்றை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News