கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதில் சிக்கல்
- ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
- அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் 31-ந்தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கத்திற்கு அரசு விரைவு பஸ்கள் மட்டும் முழு அளவில் மாற்றப்பட்டு இயக்கப்படுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிற போக்குவரத்துக்கழக பஸ்கள் இன்னும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்து சென்னை வரும் பயணிகள் மட்டும் சிரமப்படுகின்றனர்.
அவர்கள் பல பஸ்கள் மாறி தங்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தான் கோயம்பேடு வரை வர முடிகிறது.
அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களுக்கு மாறி வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் அங்கிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
850 ஆம்னி பஸ்கள் தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பராமரிப்பதற்கு தேவையான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இது குறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு பார்க்கிங் பகுதி ஒதுக்கப்படவில்லை. இது தவிர பஞ்சர், வீல் அலைண்ட்மென்ட் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு வசதி இல்லை. அவற்றை செய்து கொடுத்தால்தான் ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியும்.
ஆம்னி பஸ்களை இயக்க தேவையான அடிப்படை வசதிகள் இருந்தால்தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். இல்லையென்றால் கோயம்பேட்டிற்கு பஸ்களை கொண்டு வர வேண்டும்.
எனவே எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்தான் மாற்ற முடியும். அது வரையில் கோயம்பேட்டில் இருந்துதான் பஸ்கள் செல்லும். இதுபற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு உடனே மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆம்னி பஸ்களை மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்கள், சேலம், கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் இயக்கக்கூடிய எல்லா பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால்தான் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு பஸ்களை மட்டும் மாற்றினால் போதாது.
மேலும் இதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அனைத்து பஸ்களையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.