தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் விரைவில் இயக்கப்படும்
- அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம்.
- கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரப் பகுதியில் உள்ள பஸ் நிலையங்கள் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 1200 பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அதில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் இனிமேல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 850 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வராமல் கிளாம்பாக்கத்தோடு நின்றுவிடும்.
இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கிளாம்பாக்கத்தில் இன்று புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் ஒரு சில வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதனால் உடனே ஆம்னிகளை அங்கிருந்து இயக்க இயலாது. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகு தான் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க முடியும்.
அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும். அதே போல தென் மாவட்ட பகுதியில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கம் வந்து பின்னர் அங்கிருந்து கோயம்பேடு நிலையத்திற்கு வந்து சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.