தமிழ்நாடு (Tamil Nadu)

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு- இன்று பிற்பகலில் விசாரணை தொடங்குகிறது

Published On 2023-04-20 05:41 GMT   |   Update On 2023-04-20 05:41 GMT
  • மேல்முறையீட்டு வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளில் இடைக்கால தடை கேட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கூட்டப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை நிராகரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி தொடர்பாக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. தற்போது எந்த ஒரு இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். மேலும் இந்த வழக்குகள் 20 மற்றும் 21-ந்தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

இன்றும், நாளையும் பிற்பகலில் இந்த வழக்கு சிறப்பு வழக்காக விசாரிக்கப்படுகிறது. நாளை மாலை இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News